பலர் அடமானக் கடன்களை மீளச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம் – கனடிய மத்திய வங்கி ஆளுநர்.
ஸ்டீபன் போலோஸ்

பலர் அடமானக் கடன்களை மீளச் செலுத்துவதில் சிரமங்களை எதிர்கொள்ளலாம் – கனடிய மத்திய வங்கி ஆளுநர்.

கோவிட் -19 நோயின் தாக்கத்தினால் ஏற்பட்ட பொருளாதாரத் தாக்கத்தை நிவர்த்தி செய்ய எடுக்கப்பட்ட அவசரகால நடவடிக்கைகள் பலன் தருவதற்கான அடையாளங்கள் தென்படுகின்றன எனினும் கனடாவின் பொருளாதாரம் ஒரு நிச்சயமற்ற எதிர்காலத்தை நோக்கிச் செல்கிறது எனவே கூறவேண்டியுள்ளது என கனடாவின் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

இதர கொள்கை வகுப்பாளர்களைப் போலவே, கனடாவின் மத்திய வங்கியும், கடந்த இரண்டு மாதங்களாக, வட்டி வீதங்களைக் குறைத்து தனிப்பட்டவர்களும், நிறுவனங்களும் இலகுவாகக் கடன் பெறுவதற்கு வசதியாகவும், ஒப்பந்தப் பத்திரங்களை (bond) வாங்குவதை இலகுவாக்கியும், பல கொள்கை மாற்றங்களை செய்தது.

பல நிறுவனங்கள் குறைந்த வட்டியில் சிறிய தவணைகளில் கடன்களை எடுக்க இந்த நடவடிக்கைகள் உதவி செய்திருந்தன.

“உலக சுகாதார நெருக்கடி ஆரம்பிக்கும்போது நாம் பொருளாதார ரீதியாகப் பலமாகவும், நெகிழ்வுத்தன்மையுள்ள நிதி அமைப்பையும் கொண்டிருந்தோம். நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு இது உதவி செய்யும். ஆனால் கடன் சுமை உயரப்போகிறது என்பதையும் நாம் உணர்வோம். அதனால் சரியான பொருளாதாரக் கலவையை உருவாக்கிக் கொள்வது இன்றியமையாதது” என அவர் மேலும் தெரிவித்தார்.

அடமானக் கடன்களை மீளச் செலுத்துவதில் பிரச்சினைகள் ஏற்படலாம்.

கோவிட்-19 நோய் காரணமாக கொள்கைகள் மாற்றம் செய்யப்படாமலிருந்திருந்தால், இந்த வருட இறுதியில் வட்டி வீதம் 2.1 வீதத்தால் அதிகரித்திருக்கும். இதனால் 50 பேரில் ஒருவராவது அடமானக் கடன்களை மீளச் செலுத்துவதில் சிரமப்பட்டிருப்பார்கள்.

தற்போது அடமானக் கடன்களை மீளச் செலுத்துவதில் பின்னிற்பவர்கள் 0.2% மாகும். அது 0.8% த்துக்கு உயருமானால் அது 2009 இல் நடைபெற்ற நிதி நெருக்கடிக் காலத்திற்கு எம்மைக் கொண்டுபோய்விடக்கூடிய சாத்தியங்களுமுண்டு.

கோவிட்-19 பிரச்சினைகளால் வரலாறு காணாத வேலையின்மை உருவாகியிருக்கிறது. அதே வேளை எத்தனை பேர் நாளாந்த தேவைகளுக்கான நிதியின்மையால் சிரமப்படுகிறார்கள் என்ற ஒரு உத்தேசக் கணக்கை வங்கி தயாரித்துள்ளது.

இதன் பிரகாரம், 5 வீட்டுச் சொந்தக்காரர்களை எடுத்தால் அதில் ஒருவர் தனது இரண்டு மாத வீட்டுச் செலவுகளைச் சமாளிக்கப் பணமில்லாது அவதிப்படுவார் என்றும், நான்கு மாதச் செலவுகளை சமாளிக்க முடியாமல் மூன்றிலொரு பங்கினர் அவதிப்படுவர். என்பதும் தெரிகிறது.

வாடகைக் குடியிருப்பாளரும் நெருக்கடிக்குள்ளாவர்

கோவிட்-19 வாடகைக் குடியிருப்பாளர்களையும் சும்மா விட்டு விடப் போவதில்லை. வருமானப் போதாமையின்மையால் அவர்களும் வங்குரோத்து நிலைமைக்குத் தள்ளப்படலாம்.

அரசாங்கம் தற்போது மேற்கொண்டுவரும் வருமான நிவாரணம் தொடர்ந்து கொடுக்கப்படுமென எதிர்பார்க்க முடியாது. விரைவான பொருளாதார மீட்சி இல்லாது மக்கள் தொடர் நெருக்கடிகளுக்கு ஆளாகலாம்.

Leave a Reply